Thursday, March 3, 2011

ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி


பொதுவாக நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.


1. நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?

நிச்சயம் சாப்பிடலாம் கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :

 முழுதானிய (ஓட்ஸ், அவல்) சிற்றுண்டி

 முழு கோதுமை பிரட்

 வாழைப்பழம்

 சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.

 நடப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.

 சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

2. ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?

இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.

3. நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?

நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.

நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும், இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

4. நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?

பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

5. நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?

 பளு இல்லா நடையே சிறந்தது.

 கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.

 இரத்த அழுத்தம் கூடும்

 மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.

 தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

6. நடக்கும் ஷு எப்படி இருக்க வேண்டும்?

 குதிகால் உயரம் கூடாது.

 சரியாகப் பொருத்த வேண்டும்

 ஷுவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

 ஷு எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

7. ஷுவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?

6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷு பாதிக்கப்படும். ஆûயால் 2 ஷு வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷுவும், அடுத்த நாள் மறு ஷுவும் என உபயோகித்தால் ஷுவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.

8. நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன்கிடைக்குமா?

கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

9. நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?

 இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.

 ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால், 60/30=2, அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.

 எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.

 மேலும் சாதரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

 ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.

10. நடைப் பயிற்சியின் போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?

குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.

பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம்.

இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.
Share380

உடல்நலம் பேணுதல் குறித்த ஒரு சிறுகுறிப்பு


நமது நல்ல ஆரோக்கியமான உடல் நலனுக்கு கனிகள் மிகவும் அவசியம். பழச்சாறுகள் 100 விழுக்காடு வரை நமக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருகின்றன.


பச்சைக் கனிகளில் மினரல்கள் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ளது. இது உடல் குருதி ஓட்டத்திற்கு மிகவும் நல்லது.

சிவப்பு கனிகள் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு காத்து நிற்கிறது. தக்காளி, தர்பூசிணி மற்றும் strawberry போன்றவை இதில் அடங்கும்.

மஞ்சள் நிறக் கனிகள் கண்புரை வராது காத்து நிற்கிறது. மஞ்சச் சோளம், அன்னாசி மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் இதில் அடங்கும்.

பழச் சாறுகளின் சில பழங்கள்:

ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் புற்று நோய் வருவதை தடுத்துக் கொள்ளலாம்.

காரட், சர்க்கரை வள்ளி போன்றவை கண்களுக்கும் நல்லது. இதில் வைட்டமின் ஏ நிறைய உண்டு.
வெள்ளை மற்றும் பச்சை நிறக் கனிகளில் தாதுச் சத்துக்கள் நிறைய உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டு இதில் அடங்கும்.

பாக்டீரியா மற்றும் காளான் தீங்கு இல்லாமல் இது நம்மைக் காக்கும் சிவப்பு மற்றும் நீல நிற கனிகள் ரத்த ஓட்டம் மற்றும் இருதயத்திற்கு மிக்க நல்லது. ஆப்பிள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

குறட்டை விடுபவரா நீங்கள்


யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.


தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை முச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்


இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.


1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.


கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:



இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.


ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.
படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்

நல்ல உடல்நலம் உள்ளவர்களுக்கு சவால்விடும் சிறு பெண்

நல்ல உடல்நலம் உள்ளவர்களுக்கு சவால்விடும் சிறு பெண்


Wednesday, March 2, 2011

வெப்பம் தணிக்கும் வெண்டை


வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.


கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது.

மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.

இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.

கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்

மங்கையர் மத்தியில் சேலையின் மதிப்பு


பெண்களின் அழகை நல்ல முறையில் வெளிக்காட்டும் ஆடைகளில் சேலை முதலிடம் பிடிக்கிறது. அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் சேலை தருகிறது. 


பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். இந்தியாவில் மற்றும் இலங்கையில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சேலையின் அழகு பெண்ணின் அழகுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவளின் அழகின் அம்சங்களைக் கலந்தே நெசவாளி சேலை நெய்கிறான் என்றும் கூறுகிறது.

சேலைகள் வாங்கித் தரும்படி தொந்தரவு செய்யும் மனைவியரை அல்லது அளவு கணக்கின்றிச் சேலைகளை வாங்கி அடுக்கும் மனைவியரைக் கண்ட கணவன்மார் 'சேலையை விரும்பாத பெண்ணும் இந்தத் தரணியில் உண்டா? ' என்று வியப்படைவது அல்லது சலிப்படைவது வழக்கம். பெண்களைக் கேட்டால் 'சேலையை விரும்பாத பெண்ணும் ஒரு பெண்ணா? ' என்பார்கள். கருத்துக்கள் எப்படி மாறுபடினும் சேலை என்பது ஓர் அழகான ஆடை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. அதன் அழகிய வண்ணமும் வேலைப்பாடும் இன வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவை. உலகில் சேலையைப் போல நீண்ட வரலாறு கொண்ட ஆடை எதுவும் இல்லை.

சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளியிலும் அணிந்து வந்தனர். இந்தியாவிலும் அப்படியே. கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையிலும் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திருமணத்திற்கு பெண்கள் சேலை அணிவதே பொது நடைமுறையாக உள்ளது. வெளிநாடுகளில் வளர்ந்து வரும் இளம் இலங்கை, இந்தியப் பெண்களைக் கவரும் வகையில் மிகுந்த அழகு வாய்ந்ததும், பாரம் குறைந்து அணிவதற்கு மென்மையானதுமான சேலை வகைகள் இந்தியாவில் நெய்யப்பட்டு வருகின்றன. இதனால் நவீன மேற்கு நாட்டு ஆடைகளுடன் போட்டியிடும் அளவிற்கு சேலையின் உருவமைப்பும் தரமும் உயர்ந்து வருவதைக் காணலாம்.

சேலை மேல் உள்ள விருப்பத்தால் பல மேலை நாட்டவர் சேலை அணிந்து பார்க்க விரும்பியுள்ளனர். அத்துடன் தமிழரை மணம் முடித்த ஆங்கில அல்லது பிற இனப் பெண்கள் திருமணத்திற்குச் சேலையே அணிந்துள்ளனர். சேலை ஆத்மிக உணர்வைப் பிரதிபலிக்கும் ஓர் ஆடையாகவும் கருதப்படுவதால் தியான நிலையத்தில் பெண்கள் சேலை அணிந்தே தியானம் செய்ய வேண்டும் என்பது மிகவும் கட்டுப்படான விதிமுறையாக உள்ளது.

பெண்கள் அணியும் சேலைகளின் நிறம் மரபினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்கள் மங்களகரமானவை என்றும், அவை விசேட தினங்களில் அணிவதற்குரியன என்றும், சிகப்பு நிறம் காதலைத் தூண்டவல்லது என்றும் கருதப்படுகிறது. கர்ப்பம் தொடர்பான சில கிரியைகளுக்கும் சிவப்பு நிறச் சேலையே தெரிவு செய்யப்படுகிறது. நீலம் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்வளிக்கும் சக்தியைத் தூண்ட வல்லது என்றும் கருதப்படுகிறது. வெள்ளை நிறச் சேலை வாழ்வைத் துறந்தவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்குமென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.

சேலை காலத்துக்கு ஏற்பவும், இளம் வயதினரைக் கவரும் வகையிலும் தன்னைக் காலத்திற்குக் காலம் புதுப்பித்து வந்துள்ளது. சித்திரங்களற்ற சேலைகளுக்கு, முற்றாகப் பூ வேலை செய்யப்பட்ட சேலைகளை இணைப்பது முதல் முந்தானைப் பகுதியை, கரையை புதிய வகையில் அமைப்பது என்று பல்வேறு வகைகளில் சேலையை மாற்றியமைத்து வருகின்றனர். சேலை அணிய விரும்பும் இளம் பெண்களiன் வசதிக்காக அதிக பிரச்சினை தரும் மடிப்புப் (pleats) பகுதியில் இணைப்பு (zip) இணைக்கப்பட்டுள்ளது என்றால் மாற்றம் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம். மேற்கத்தைய நாடுகளில் வளர்ந்து வரும் இளம் தமிழ்ப்பெண்களுக்கு இவ்வாறு புதிய பல அம்சங்கள் இணைக்கப்பட்ட போதும் இந்தியச் சேலை நெசவாளர்கள் மரபு ரீதியான விஷயங்களைச் சேலைகளில் பிரதிபலிப்பதற்குக் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். சேலையில் முந்தானை அல்லது கரையில் இராமாயண மகாபாரதக் காட்சிகள் நெய்யப்படுகின்றன. அது மட்டுமல்ல வங்காளத்தில் உள்ள கிராமியக் காட்சிகள், தாஜ்மகாலில் உள்ள சில முக்கிய சுலோகங்கள், என பல மரபு பூர்வமான விஷயங்கள் சேலைகளiல் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா என்றதும் அங்கு நெய்யப்படும் அழகான பருத்தி, பட்டுச் சேலைகளே பலருக்கு நினைவு வரும். இந்திய மாநிலங்கள் பலவற்றில் சேலை நெய்தலே முக்கிய தொழிலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான சேலைக்குப் பெயர் போனதாக உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் சேலை வகைகளுக்கு அளவு கிடையாது. ஆயினும் எல்லமே அழகான சேலைகள் என்று சொல்லமுடியாது. அதிகம் விற்பனையாகும் சேலை வகைகள் சிலவே.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரச்சேலைகள் உலக ரீதியில் பிரசித்தி பெற்றவை. இது மிக அழகும் சிறப்பும் வாய்ந்த பருத்தி, பட்டுச் சேலைகளுக்குப் பெயர் போனது. கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அங்கு பட்டுச் சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. இறுக்கமாகச் சுற்றப்பட்ட மூன்று நூல்களைக் கொண்டு நெய்யப்படும் பாரமான பட்டுச் சேலைகளுக்கு காஞ்சிபுரம் பேர் போனது. பட்டுச் சேலை நெய்வது அவர்களது முக்கிய பணியான போதும் பருத்தி, பட்டு-பொலியஸ்ரர் சேலைகளும் அங்கு நெய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் தற்போது மிகப் பிரபலியமாக விழங்கும் நெசவாளர்கள் 1970 களில் கலாஷேத்திரத்தின் பண்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள். பயிற்சியின் பின் துணியின் நிறையிலும் பாணியிலும் காத்திரமானவையும் அகலமான கரைகள் கொண்டவையுமான சேலைகளை நெய்தனர். மரபார்ந்த வடிவங்களான மாங்காய், மயில், டயமண்ட வடிவம், தாமரை, குடம், பூங்கொடி, பூ, கிளி, கோழி ஆகியவற்றுடன் பல பண்டைய கதைகளின் காட்சிகள் என்பன கரைகளில் நெய்யப்படுகின்றன. பருத்திச் சேலைகளும் நூலால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தற்போது கணணி மூலம் அமைக்கப்பட்ட சித்திரங்கள் கொண்ட கரைகள் காஞ்சிபுரம் சேலைகளுக்கு இணைக்கப்படுகின்றன. நெய்யும் முறைகளும் துணியும் சந்தையின் தேவைக்கேற்ப மாறிய போதும் இன்றும் காஞ்சிபுரம் சேலைகள் மரபார்ந்த பல விஷயங்களைக் கொண்டுள்ளன. அவை பாரமுள்ளனவாகவும் மிக அழகாகவும் இருப்பதனால் இன்றும் திருமணச் சேலைகளாக, கூறைகளாக பலரால் வாங்கப்படுகிறது.

மரபு ரீதியான ஆடைகள் செளகரிகமானவை, ஆத்மிக உணர்வைத் தருவன என்னும் உண்மையை உணர்ந்ததனால் போலும் இந்திய இலங்கைப் பெண்கள் இன்றும் தமது பண்பாட்டுக்குரிய சேலையை விடாது அணிந்து வருகின்றனர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு விட்டு நாடு போய் வாழ நேரிடுவது இன்று பொதுவிதியாக உள்ளது. அப்படி வாழ நேரும் இல்லாமியர் தவிர்ந்த பல இனத்தவரும் தத்தமது பண்பாட்டுக்குரிய ஆடையை விட்டு மேற்கத்தைய ஆடை வகைகளை அணிந்த போதும் இவ்வாறாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இலங்கைப் பெண்கள் குறைந்தது விசேட தினங்களுக்கும் ஆலய வழிபாட்டின் போதுமாவதும் தமது மரபார்ந்த ஆடையான சேலையை அணிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வாழும் போது நாம் அணியும் ஆடை என்பது நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைப் பறைசாற்றி நிற்கும். இவ்வாறு இந்திய இலங்கைப் பெண்களால் காப்பாற்றப்பட்டு உலகம் முழுவதையும் தனது அழகால் கவர வைத்த சேலையானது 21ம் நூற்றாண்டிலும் நாகரிக ஆடையாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி



ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.


சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.

பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.

ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.

வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

கவனத்தில் வையுங்கள்:

சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.

பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?

நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?

Axe

பெண்களின் ஃபேவரைட்?

ஜோவன் வொய்ட் மஸ்க்

மேக்ஸி - ப்ளூ லேடி

விக்கல் ஏன் ஏற்படுகிறது


மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புக் கூடு விரிய வேண்டும். இதற்கு துணை புரிய வெளிய மார்புத் தசைகள் சுருங்க, உதரவிதானம் சுருங்கி கீழிறங்க நுரையீரல்கள் இரண்டும் விரியும்.


அப்போது நுரையீரல்களில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்று குரல் நாண்களை நன்றாகத் திறந்துகொண்டு மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களுக்கும் நுழையும். இது இயல்பாக நிகழும் நிகழ்வு.

சில சயமங்களில் மார்புத் தசைகள் போதுமான அளவிற்கு சுருங்காது. உதரவிதானம் சரியாக கீழிறங்காது. குரல் நாண்கள் நன்றாகத் திறக்காது. இம்மாதிரி சமயங்களில் மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழை வேண்டும். அப்போது ஒருவித விநோத ஒலி உண்டாகும். அதுதான் விக்கல்.

சாதாரணமாக நாம் அளவிற்கு மீறி அல்லது அவசரமாக உணவு உட்கொண்டால் விக்கல் வரும். தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

அதேசமயம், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Tuesday, March 1, 2011

பெண்களை காதலிப்பது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

2 முறை பிரஷ்... நாள் முழுக்க பிரெஷ்


பொலிவான முகம், நிறத்துக்கு ஏற்ற உடை, ஸ்டைலான பேச்சு என பார்த்த நொடியில் சென்டம் மார்க் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருத்தரிடமும் இருக்கும். இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் புற அழகில் செலுத்தும் கவனத்தை அகத்தில் கோட்டை விடுவது அபத்தம். 


இவர்கள் வாயில் இருந்து வீசும் துர்நாற்றம் சென்டம் மார்க்கை ஜீரோ நிலைக்கு மாற்றி விடும். எல்லா விஷயத்துக்கும் மற்றவரிடம் பேசியாக வேண் டிய சூழலில் இருப்பதால் வாயை கவனிப்பது முக்கியம் என்கிறார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார் பிரசாத்.

பல் பிரச்னைகள் எதுவும் பரம்ப ரைப் பிரச்னை கிடையாது. வாய் துர்நாற்றம் பிரச்னைக்கு முழுக்க முழுக்க அவரவரே காரணம். பல் மற்றும் ஈறுகளில் படியும் அழுக்கின் காரணமாகத் தான் பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் உருவாகிறது.

பற்களில் ஆரம்பத்தில் சிறு கரும்புள்ளி போல அழுக்கு படியும். இது முதலில் சாப்ட் நேச்சராக இருக்கும். இதனை சரிவர சுத்தம் செய்யாமல் விடும்போது கடினமான அழுக்காக மாறி விடும். இதனை பல் துலக்குவதன் மூலம் சரி செய்ய முடியாது. பல்லில் படிந்த அழுக்கை அப்படியே விட்டு விட்டால், அந்த கரும்புள்ளி பெரிதாகிவிடும். சாப் பிடும் போது கூசும்.

அந்த இடத்தில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டு அடிக்கடி இம்சைப் படுத்தும். இதன் எல்லை தான் பல் வலி. சிறிய அள விலான அழுக்கு, பல்வலி எனும் பெரிய பிரச்னையாகும் வரை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. சிறிய புள்ளி உருவாகும் போதே கவ னித்து அடைத்து விடுவது நல்லது. இதே அழுக்கு ஈறுகளில் படிவதன் அடையாளம் தான் பல்லில் இருந்து ரத்தம் வடிவது. ஈறு பிரச்னையை கவனிக்காமல் விட்டால் சீழ் கட்டி கள் உருவாகி வயிற்றையும் தாக்க வாய்ப்புள்ளது.

வாய் நாற்றத்துக்கு இன்னொரு காரணம் குடல் புண் மற்றும் குடல் புழுக்கள். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். எனவே வாய் நாற்றம் உள்ளவர்கள் டாக்டரை அணுகி அதற்கான கார ணத்தை கண்டறியுங்கள். வயிற்றில் பிரச்னை இருந்தால் அதை சரி செய்வதன் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்கி றார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

பாதுகாப்பு முறை:

தினமும் கட்டாயம் 2 முறை பல் துலக்கவும். பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ்சை 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும். அனைவருக்குமே சாப்ட் வகை பிரஷ்கள் ஏற்றதாக இருக்கும். பல் சொத்தை அல்லது பல் பிரச்னை என்றவுடன் குழந்தைகள் சாக்லேட் சாப்பிட தடா போடுகிறோம். ஆனால் அப்படி தடை செய்ய தேவையில்லை. சாப்பிடும் போது பல்லில் ஒட்டிக் கொள்ளாத சாக்லேட் வகைகளை அனுமதிக்கலாம்.

பற்களில் சாக்லேட் ஒட்டினால் உடனடியாக வாய் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். 14 வயது வரை பற்கள் விழுந்தாலும் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் பல் சொத்தை ஏற்பட்டாலும் சிலர் கண்டுகொள்வதில்லை. பால் பல்லில் சொத்தை ஏற்பட்டு அந்த இடத்தில் உள்ள பல் விழுந்து விடும்போது புதிய பல் முளைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

பற்களில் சொத்தை எந்த வயதில் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். வலியின்றி விரைவில் குணமாகக் கூடிய நவீன லேசர் சிகிச்சைகள் தற் போது உள்ளன. அதேபோல் பல் மற் றும் ஈறு பகுதியில் அழுக்கு படிவது தெரிந்தால் சாப்டாக இருக்கும் போதே சரி செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் வாய் நாற்றத்தை தவிர்க்கவும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. எனவே காலை முதல் மாலை வரை பிரஷ்ஷாக உணர வாயை கவனிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

கூந்தல் அதிகம் உதிர்வதை தடுக்க


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

டை அடித்துவிட்டுக் குளிக்கலாமா


கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும்.


அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள். அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.

சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள். எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.

கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.

தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.

ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

புற்று நோய்க்கு மனிதனே காரணம்


புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.