Showing posts with label tolet house. Show all posts
Showing posts with label tolet house. Show all posts

Monday, February 28, 2011

வீடு பார்க்கப் போறீங்களா


வீடு பார்க்கப் போகும் போது பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனென்றால் நடந்து வந்தால் தான் எவ்வளவு நேரம் (தூரம்) ஆகிறது என்று தெரியும். நீங்கள் கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ அடிக்கடி வெளியே செல்ல பஸ்தான் தேவைப்படும்!


முடிந்த வரை உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி அருகிலேயே வீடு இருக்கும்படி பாருங்கள்.

வீட்டைச் சுற்றி இடமிருந்தால் அதன் வழியே நடந்து சுற்றிப் பாருங்கள். அப்போதுதான் எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டைப் பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.

நீங்கள் குடிபோகும் வீட்டில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி பண்ணாமல் இருந்தால் நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள். யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும்-போதுதான் வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு அந்த வீடு போதுமா? என்பது தெரிய வரும்.

தண்ணீ­ர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று நீங்களே சோதித்துப் பார்த்து விடுங்கள்.

தண்­ணீர் பைப் லீக் ஆவது, பாத்ரூமில் தண்ணீ­ர் அடைத்துக் கொண்டு போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்கள் லாக் பண்ண முடியாமல் இருப்பது என்று எதுவாக இருந்தாலும் உங்க வீட்டு உரிமையாளரிடம் சொல்லி செய்யச் சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்த பிறகு அவர் செய்து தரமாட்டார்.

சில இடங்களில் கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர் நாய் வளர்த்தால் எங்கு கட்டி வைப்பார்கள் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால் அது குரைத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். மேலும் அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் பண்ண வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், ஃபேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என ஒரு நோட்டில் குறிப்பிட்டு உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் காலி பண்ணும்போது ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள்தான் தண்டம் அழவேண்டி வரும்.

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில் எத்தனை வீடுகள் உள்ளது என்று கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனென்றால் அவர்கள் செல்லும் பாதை உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

நீங்கள் எத்தனை இரு சக்கர வாகனம் வைத்துள்ளீர்கள்... உங்கள் வண்டியை நிறுத்த இடம் உள்ளதா எனபதைக் கவனியுங்கள்.

வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒருமுறை உயர்த்துவார்கள் என்பதைத் தெளிவாக பேசிக்கொள்ளுங்கள் ஏனென்றால், சில இடங்களில் உரிமையாளர் திடீரென்று 'அடுத்த மாத வாடகையுடன் ரூ.200 சேர்த்துக் கொடுங்கள்' என்று சொல்லி விடுவார்கள்.